Ads (728x90)


பதவி பறிபோன தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர், "எங்களை உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்; பெரிய பதவிகள் வேண்டாம்; கட்சியில் அங்கீகாரம் தந்தால் போதும்" என, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு, துாது அனுப்பி உள்ளனர்.

சசிகலா மற்றும் தினகரனால், தங்களின் அரசியல் எதிர்காலம் நாசமாகி விட்டதாகவும் புலம்பி உள்ளனர்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் அணியைச் சேர்ந்த, 19
எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது, கட்சி தாவல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க, சபாநாயகர் தனபாலுக்கு, அரசு கொறடா பரிந்துரை செய்தார்.

'நோட்டீஸ்'

விளக்கம் கோரி, 19 எம்.எல்.ஏ.,க்களுக்கும் சபாநாயகர், மூன்று முறை, 'நோட்டீஸ்' அனுப்பினார். இதில், ஜக்கையன் தவிர மற்ற, 18 பேரும் விளக்கம் அளிக்காததால், அவர்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார்.

இது, அரசிதழிலும் வெளியானதால், அவர்கள், 'மாஜி'க்கள் ஆகி உள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து, 18 பேரும்,
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி, 'எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது.

'மறு உத்தரவு வரும் வரை சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக்கூடாது; தேர்தல் குறித்த அறிவிப்பையும் வெளியிடக் கூடாது' என, உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை, அக்., 4க்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, தினகரன் அணியைச் சேர்ந்த, 'மாஜி' அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி மீது, வருமான வரித்துறை மற்றும் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனால், தகுதி நீக்கம் செய்யப்பட்டோரில், ஏழு எம்.எல்.ஏ.,க்கள், 'எங்களை காப்பாற்றுங்கள்; நாங்கள் உங்களிடம் சரணடைகிறோம்' என, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு, துாது அனுப்பி உள்ள தகவல் கசிந்துள்ளது.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

தினகரன் அணியைச் சேர்ந்த, 'மாஜி' அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் ஆகியோரை கைது செய்ய, ஆளுங்கட்சி தரப்பில் தீவிரம் காட்டப்படுகிறது.

தொழில் பாதிப்பு :

மேலும், அவர்களின் ஆதரவாளர்கள், அபிமானிகளுக்கு நெருக்கடி தரும் வகையில்,
அவர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள் மீது அதிரடி சோதனைகள் நடத்தப்படுவதால், தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அடுத்த கட்டமாக, தங்கள் மீது நடவடிக்கை பாயுமோ என, எம்.எல்.ஏ.,பதவியை இழந்த பலர், கலக்கம் அடைந்துள்ளனர்.

எனவே, தங்களின் தொழில்களை பாதுகாக்கும் வகையில், ஏழு பேர், முதல்வர் பழனிசாமிக்கு, நெருக்கமானவர்கள் வழியாக, துாது அனுப்பி உள்ளனர். 'தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும், முதல்வர் பழனிசாமி அரசையே ஆதரிப்போம்;

ஒரு வேளை எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், கட்சியில், முதல்வர் பழனிசாமி கரத்தை வலுப்படுத்துவோம். 'எங்களுக்கு பெரிய பதவிகள் ஏதும் வேண்டாம்; கட்சியில் அங்கீகாரம் கிடைத்தால் போதும்' என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சசிகலா மற்றும் தினகரனால் தங்களின் அரசியல் எதிர்காலம் நாசமாகி விட்டது என்றும், புலம்பியுள்ளனர். அத்துடன், 'முதல்வர் விரும்பினால், தினகரன் அணியில் இருந்த படி, 'ஸ்லீப்பர் செல்' எனப்படும், ரகசிய குழுவாக செயல்பட தயார்' என்றும் கூறியுள்ளனர்.  இந்த தகவல், முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில், வேறு எந்த முடிவும் இனி எடுக்க முடியாது. கட்சியில் சேர்ப்பது குறித்து, விவாதித்து முடிவு செய்யலாம்' என, முதல்வர் பதில் அளித்து உள்ளதாக கூறப்படுகிறது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தீபாவுடன் சேர்ந்த புருஷன் மாதவன் சிறப்பு யாகம் | live news tamil

Post a Comment

Blogger