என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் உண்மை விளக்க மடல்.
பொய்களுக்குப் பூச்சூட்டி அலங்காரம் செய்து வைத்தாலும் அந்த ஒப்பனை அதிக நாள் தாங்காது. உண்மையின் முகம் எப்படியும் வெளிப்பட்டுவிடும். தமிழ்நாட்டில் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
முதலமைச்சராக இருந்த செல்வி.ஜெயலலிதா அம்மையார் அவர்கள் 2016 செப்டம்பர் 22ஆம் நாள் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அன்று தொடங்கி, அவரின் மரணச்செய்தி வெளியான டிசம்பர் 5ஆம் நாள் வரை ஜெயலலிதா அவர்களுக்கு என்னவிதமான உடல்நலக் கோளாறு,
அவரின் உடல்நலன் என்ன நிலையில் உள்ளது என்ற உண்மை நிலவரம் எதுவுமே சரியாக வெளியிடப்படவில்லை. மாறாக, தமிழ்நாட்டு மக்களையும் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுக்கொண்ட அவரது கட்சித் தொண்டர்களையுமே திசை திருப்பும் வகையில், இட்டுக்கட்டிய செய்திகளையே வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.
முதலமைச்சர் என்ற பொறுப்புக்கு அளிக்க வேண்டிய மரியாதையின் காரணமாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் தலைவர் கலைஞர் அவர்களின் உத்தரவுக்கிணங்க, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும் நமது கழக நிர்வாகிகளும் அக்டோபர் 8ஆம் தேதி 2016 அன்று அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வி.ஜெயலலிதா அம்மையாரின் நலன் விசாரிக்கச் சென்றோம்.
அமைச்சர்களிடம் தான் அவரது நலன் குறித்து கேட்டறிய முடிந்தது. இதனை அப்போதே ஊடகங்களிடம் தெரிவித்து, அம்மையார் அவர்கள் விரைந்து நலன் பெற வேண்டும் என்கிற விருப்பத்தையும் கழகத்தின் சார்பில் தெரிவித்துத் திரும்பினோம்.
உடல்நிலை குறித்து எங்களிடம் தெரிவித்த அமைச்சர்கள் கூட, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்றைய முதலமைச்சரைப் பார்க்கவில்லை என்கிற உண்மையை அண்மையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு பொதுமேடையில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரி வெளிப்படுத்தியிருக்கிறார்.
செல்வி.ஜெயலலிதா அவர்களை தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் உள்பட யாருமே பார்க்கவில்லை. அவர்கள் பார்த்தார்கள் என்றும் இவர்கள் பார்த்தார்கள் என்றும் சொல்வது எல்லாமே பொய் என்று ஊரறிய உண்மையை உரைப்பதாகக் கூறி அமைச்சர் அந்த மேடையில் பேசியிருக்கிறார்.
ஓர் அமைச்சரே உண்மையைச் சொன்ன பிறகு, அடுத்தடுத்து பல அமைச்சர்கள் பொய்ப்பூச்சு பூசி அதனை மறைக்கப் பார்க்கிறார்கள். கிராமப்புறங்களிலே எரிந்த கட்சி-எரியாத கட்சி என்று இரு அணிகளாக இருந்து லாவணிக் கச்சேரி நடத்துவார்களே
அதுபோல இரு அணிகளாக செயல்படும் அ.தி.மு.க.வுக்குள்ளேயே பல அணிகள் பிரிந்து, சிகிச்சையின் போது செல்வி.ஜெயலலிதாவைப் பார்த்தோம் என்று ஒரு பிரிவினரும், பார்க்கவேயில்லை என்று இன்னொரு பிரிவினரும் லாவணிக் கச்சேரி நடத்துகிறார்கள்.
சிகிச்சைக்காக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து, அவரது மரணம் அறிவிக்கப்பட்ட நாள் வரை எல்லாமே மர்மமாக இருந்த நிலையில், முதலமைச்சர் இட்லி சாப்பிட்டார், எழுந்து நடந்தார், காவிரி பிரச்சினை குறித்து அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்தினார் என்று தினம் ஒரு தகவல் பரப்பப்பட்டது.
முதலமைச்சர் நலமடைந்து நாட்டு நலன் பற்றி ஆலோசனை நடத்துகிறார் என்றால் அந்தப் புகைப்படத்தை வெளியிடலாமே என அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் கோரிக்கை விடுத்தார். ஆனால், அன்று அரசியல் காழ்ப்புணர்வுடன் அதனைக் கடுமையாக விமர்சித்தவர்கள் தான் இன்று புகைப்படம் மட்டுமல்ல, வீடியோவும் வெளியிட வேண்டும் என்கிறார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னதைக் கேட்டிருந்தால் அப்போதே உண்மைகள் வெளிப்பட்டிருக்கும்.
அம்மையார் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டில் சி.சி.டி.வி. கேமரா இல்லை என்று அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ஜெயலலிதாவின் தோழி திருமதி.சசிகலா அவர்கள் மருத்துவமனை அனுமதியுடன் தனிப்பட்ட முறையில் எடுத்த வீடியோ காட்சிகள் இருப்பதாகவும் அதை உரிய விசாரணை அமைப்பில் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.
மருத்துவமனையில் ஜெயலலிதா அம்மையார் அனுமதிக்கப்பட்டு ஏறத்தாழ 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த போதே தமிழகத்தின் புலனாய்வு இதழ்கள் அவரது உடல்நிலை குறித்த பல செய்திகளையும் மருத்துவ ஆவணங்களையும் வெளியிட்டு வந்தன. நக்கீரன், ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட ஏடுகளில் இந்த செய்திகள் இடம்பெற்றன.
தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகத்தில் செல்வி.ஜெயலலிதா போயஸ் கார்டனிலிருந்து அப்பலோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட போது என்ன நிலையில் இருந்தார் என்பதற்கான நோயாளி நலன் அறிக்கை (பேஷன்ட் கேர் ரிப்போர்ட்) வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் ஏற்கனவே ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு கடந்த மார்ச் மாதத்தில் தமிழக அரசிடம் அப்போலோ மருத்துவமனை அளித்த அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, செப்டம்பர் 22ந் தேதி இரவு 10.06 மணிக்கு போயஸ் கார்டனில் அம்மையார் ஜெயலலிதாவை மருத்துவர்கள் குழு பரிசோதித்த போது அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். ரத்த அழுத்த அளவு உயர்ந்து140/100 என்ற அளவில் இருந்துள்ளது.
சர்க்கரை அளவு கடுமையாக உயர்ந்து 508 எம்.ஜி. என்ற அளவில் இருந்துள்ளது, இதயத்துடிப்பும் சீராக இல்லாமல் 88 பல்ஸ் என்ற நிலையில் இருந்துள்ளது. 100 சதவீதம் அளவு இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவும் 48% என்ற மிக மோசமான நிலையில் இருந்துள்ளது என்பதை நோயாளி நலன் அறிக்கையும், மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அதே மருத்துவமனையின் அறிக்கையும் தெரிவிக்கின்றன. இதைத் தான் அவர் சிகிச்சை பெற்று வந்தபோதே புலனாய்வு இதழ்களும் குறிப்பிட்டு எழுதி வந்தன.
இதனடிப்படையில் பொதுமக்களுக்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் எழக்கூடிய கேள்விகள் ஏராளமானவை. அதே கேள்விகள்தான் தமிழகத்தின் முதன்மையான எதிர்க்கட்சி என்ற முறையிலும், வாக்குரிமை கொண்ட குடிமகன் என்ற முறையிலும் நமக்கும் ஏற்படுகிறது.
மத்திய அரசின் உயர் பாதுகாப்பான இசட் ப்ளஸ் பாதுகாப்பு பிரிவில் இருந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரின் வாகன வரிசையில் (கான்வாய்) ஆம்புலன்ஸ் இல்லையா? தனது இல்லத்தில் மயங்கிக் கிடந்தவரை அந்த ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லாமல், தனியார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸை வரவழைத்து அழைத்துச் சென்றது ஏன்?
சர்க்கரை அளவு கடுமையாக உயர்ந்து, இதயத்துடிப்பு அதிகரித்து, ஆக்ஸிஜன் அளவு சரிபாதிக்கும் கீழே குறைந்து மயங்கிய நிலையில் முதலமைச்சரை அனுமதித்த நிலையில், அவருக்கு காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளியாக என்ன காரணம்? யாருடைய நிர்பந்தம்?
மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் பெற்று வந்த முதலமைச்சர், காவிரி பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார் என்று அரசின் சார்பில் அறிக்கை வெளியிட்டது எப்படி?
நுரையீரல் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர்களும் அதிகாரிகளும் புடைசூழ ஆலோசனை நடத்துவது முதலமைச்சரின் உடல்நலனில் அக்கறை காட்டும் சிகிச்சை முறைதானா? முதல்வர் ஆலோசனை நடத்தினார் என அரசு சார்பில் அறிக்கை வெளியிட துணைபோன உயரதிகாரிகள் யார், யார்?
முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய அரசன் இசட் ப்ளஸ் பாதுகாப்பு படையினர் எங்கே சென்றனர்? 75 நாட்களும் அவர்கள் என்ன செய்தனர்? 75 நாட்களும் அவர்கள் என்ன பணியாற்றினர் என்பது மத்திய அரசின் உள்துறைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா? அப்படியெனில், ஜெயலலிதா அம்மையாரின் நலன் குறித்து மத்திய அரசுக்கு அப்போதே முழுமையாகத் தெரியுமா?
கவர்னரோ மத்திய அமைச்சர்களோ மருத்துவமனையில் ஜெயலலிதா அம்மையாரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்கிற மாநில அமைச்சரின் பகிரங்க பேச்சுக்கு ஆளுநர் மாளிகையின் பதில் என்ன? மத்திய அமைச்சர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?
திருமதி.சசிகலா அவர்கள் கூட அக்டோபர் முதல் வாரத்துக்குப் பிறகு அம்மையார் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை என்று டி.டி.வி.தினகரன் சொல்கிற நிலையில், இடைத்தேர்தல் விண்ணப்பங்களில் அவருடைய கைரேகை பதிவானது எப்படி? அப்போது ஜெயலலிதா என்ன நிலையில் இருந்தார்?
விண்ணப்பத்தில் கைரேகை பதிவு செய்யும் அளவிலேயே உடல்நலன் பெற்றிருந்த ஜெயலலிதா அம்மையார், வாக்காளர்களுக்கு விடுத்த வேண்டுகோள் அறிக்கையில் கையெழுத்திட்டது எப்படி? முதலமைச்சரின் கையெழுத்தையே மோசடியாக போடக்கூடியவர்கள் அவரைச் சுற்றியும், அவரது அமைச்சரவையிலும், தலைமைச் செயலகத்திலும் இருந்தார்களா? அப்படியெனில் என்னென்ன திட்டங்களுக்கு கமிஷன் அடிப்படையில் மறைந்த முதலமைச்சரின் கையெழுத்து இதுவரை போடப்பட்டுள்ளது?
முதலமைச்சரின் இலாகாக்கள் அவரது ஒப்புதலுடன் திரு.ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகையிலிருந்து அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது. மயங்கிய நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில், கடுமையான நோய்த்தொற்றுடன், கையெழுத்திட முடியாத நிலையில் இருந்த ஜெயலலிதா அம்மையார் எந்த முறையில் தன்னுடைய இலாகாக்களை மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்தார்?
ஜெயலலிதா அம்மையாரின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நள்ளிரவு கடந்தநிலையில், இடைக்கால அமைச்சரவைக்குப் பதிலாக, திரு.ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உடனடியாக முழுமையான அமைச்சரவை பதவியேற்றதற்கு காரணம் என்ன?
பதவி வேட்கைக்காகத்தான் அம்மையார் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் தொடர்வதாக 75 நாட்களும் தெரிவிக்கப்பட்டனவா? இந்தக் கேள்விகள் நம்முடைய தனிப்பட்ட கேள்விகள் அல்ல. தமிழ்நாட்டு மக்களும், ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க தொண்டர்களும் கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகள்.
இந்தக் கேள்விகளுக்கான விடையை, செல்வி.ஜெயலலிதாவின் கல்லறை மீது பதவி நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்களால் அரைகுறை மனதுடன் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷனால் முழுமையாக வெளிக்கொண்டு வரமுடியாது. சி.பி.ஐ. போன்ற தன்னாட்சி அமைப்பின் மூலமான விசாரணையில் தான் பெருமளவு உண்மைகள் வெளிப்படும்.
அம்மா.. தாய்.. தெய்வம்.. என்றெல்லாம் ஜெயலலிதா பற்றி மேடைகளில் தொடங்கி சட்டமன்றம் வரை உதட்டளவில் உயர்வாகப் பேசிவிட்டு, செயல் முழுவதும் அவருக்கு துரோகம் இழைக்கும் வகையில், அவரது உடல்நிலையை சாதகமாக்கி, சிகிச்சை கால மர்மங்கள் வெளியே தெரியாதபடி, மரண அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலேயே கல்லறையில் புதைத்துவிட்டு, பதவி சுகம் அனுபவிக்கிற (அ)தர்ம யுத்தக்காரர்களையும், குதிரைபேர ஆட்சியாளர்களையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
ஜெயலலிதா இறப்பு முழு விவரம் அன்றிலிருந்து இன்று வரை | live news tamil

Post a Comment
Blogger Facebook